Sunday, October 28, 2012

நண்பனும், அவனின் பிரச்சனைகளும்

என்னுடைய ஒரு நண்பன், எப்போதும் அவனின் போதை தெளிவு பெற என்னை போட்டு பாடு படுத்தி எடுக்கும் ஒரு சோகமான பதிவு தான் இது.. நமக்கே ஆயிரம் பிரச்னை என்று போய் கொண்டு இருக்கும்போது, நம்மை என்னமோ இந்த உலகத்துக்கு ஆனந்தம் மட்டுமே பரிசு கொடுக்க வந்த 'கார்பொரேட் சாமியார்' என்று நினைத்து கொண்டு என்னிடம் புலம்பி தள்ளுவது அவனுக்கு எப்போதுமே கை வந்த கலை.. எப்போது எனக்கு அது கால் வந்த கலை என்று ஆகி அடித்து துரத்த போகிறேன் என்று தெரியவில்லை. அவசரமாக வெளியே கிளம்ப போகும் வேளையில் - ' எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது ஹரி.. என்னுடைய அம்மாக்கும் பொண்டாடிக்கும் எப்படி பிரச்னை சரி பண்றது.' னு கேட்டு என்னுடைய அறிவுரை(?!!!) கேட்பான். இந்த பிரச்னை தான் எல்லா குடும்பத்திலும் உண்டே, ஆதாம் ஏவாள் இரண்டு பேரை தவிர மற்ற எல்லா கணவன் மனைவியும் கண்ட பிரச்னை தான் இது. எனக்கு அடுத்த மாசம் தான் கல்யாணம், இந்த மாதிரி பிரச்சனையில் அனுபவம் வேறு இல்லை. எப்படி சொல்லுவேன் அவனுக்கு ஆறுதல். என்னதான் பிரச்னை என்று ஒரு கேள்வி கேட்டது தான் என்னுடைய தப்பு.

'என்னுடைய அம்மா, என்னோட பொண்டாட்டி ரெண்டு பேரும் விட்டு கொடுத்து போறது இல்லை, எப்போ பார்த்தாலும் ஏதாவது சின்ன விஷயத்துக்கு கோவம் வருது. அவுங்க ரெண்டு பெரும் பிடிச்ச மாதிரி சமையல் செய்யணும் னு சண்டை.. என் பொண்டாட்டி அவ தங்கச்சி வீட்டுக்கு போக விடலைனு சண்டை.. அம்மாக்கு பொண்டாடிக்கு எடுத்த மாதிரி விலை அதிகமா புடவை எடுக்கல னு கோவம். அதே பொண்டாடிக்கு அந்த புடவை விலை கம்மியா இருக்கேனு கவலை. வேலைக்காரி வரலையா, தண்ணீர் மோட்டார் ல வரல னு சின்ன சீன விஷயம் பெருசா ஆகி, வார்த்தைகள் தடித்து என்னைய கடுப்பு ஏத்தி விடுது' னு வரிசையா லிஸ்ட் போட்டுக்கிட்டே போனான். எனக்கு மயக்கம் தெளிய காளிமார்க் சோடாவும் முயன்று தோற்று போனது.. ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பா.. சத்தியமா கண்ணை கட்டி விட்ட மாதிரி இருந்துச்சு. தூரத்தில் நவம்பர் மாசம் வருது னு எனக்கு எச்சரிக்கை மணி வேற அடிக்குது. எல்லாத்தையும் சமாளிச்சு, அவன் கிட்ட என்ன பேசறது னு தெரியாம எப்பவும் போல நம்ம பிரதமர் மாதிரி சிரிச்சு சமாளிச்சு அவனை வழி அனுப்பி விட்டுட்டு வந்தேன். அவன் நிம்மதியா தான் போறான் அவன் பாரம் இறங்கி போயிடுச்சு னு, ஆனா என்னைய அவனோட போதைக்கு ஊறுகாய் ஆக்கினது தான் வருத்தமா போச்சு.

இது எல்லாவற்றிலும் என்னுடைய பதில் என்ன என்பதை எதிர்பார்க்கும் அந்த வேளையிலும் என்னுடை நேரத்தையும் முழுசா முழுங்கிகிட்டு ஒண்ணுமே தெரியாத வித்தை எல்லாம் எங்க இருந்து தான் வருது உங்களுக்கு னு நினைச்சுப்பேன்.. சில சமயம் அவனின் மனைவி பேசும்போது என்னை மாட்டிவிட்டு, அவர்களும் என்னை சாலமன் பாப்பையா மாதிரி நடுவர் ஆக்கி அமைதியா இருப்பாங்க. பெண்களிடம் பிடிக்காத ஒன்று , அவர்கள் பக்கம் நியாயம் வேண்டும் என்பதில் உறுதியா இருப்பர். ஆனால் இரண்டு பெண்கள் மோதும் இடத்தில் எந்த பெண்ணை ஆதரித்து பேசுவது என்பது மிகவும் சிக்கலான காரியம் தான். (எப்படி எல்லாம் மாட்டி இருக்கேன், பாருங்க). அவர்களை சமாளித்து வெளியில் வருவது என்பது நான்கு மணி நேரம் விவசாயி இல்லா மின்சாரம் பெற்றது போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று. தப்பித்து ஓடி வந்தால் போதும்.

அவர்களின் பிரச்னை என்ன என்று தெரிந்தும் தீர்க்க முடியாத அப்பாவியா இருக்கும் நண்பனை பெற்றது என்ன பெரிய பேறு. அவனிடம் எல்லாவற்றிலும் நீ தான் முடிவு எடுக்கணும் னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன். இப்படி இருக்கும் ஆட்களிடம் இருந்து தப்பிக்க கண்டிப்பாக நாம் விலகி இருப்பது நல்லது தான்.அக்கறை கொண்டு ஆறுதல் கூற நான் எப்போதுமே தயார், ஆனால் உன் சோக மூட்டையை தூக்கி கொண்டு ஓட நான் ஆள் இல்லை. இப்போது விளையாட்டாக சொன்னபடி இல்லாமல், நிச்சயமா உட்கார்ந்து கேட்கவும் நான் இருக்கிறேன். ஆனால் முடிவு எல்லாம் நீ தான் எடுக்க வேண்டும். என் பக்கம் தள்ளி விட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதை நானும் அனுமதிக்க மாட்டேன்.  உதவி செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவனும் நண்பன் தான், உதவி செய்ய கூடாத இடத்தில் இல்லாமல் இருப்பவனும் நண்பன் தான். பிரச்சனைகளை தீர்த்து விட்டு, வாழ்வியலை நன்றாக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.

Cheers,
~Sudhan

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home